search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிட்டன் பிரதமர்"

    • பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டாமருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
    • இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம் என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    பிரிட்டன் பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கீர் ஸ்டாமர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற கீர் ஸ்டாமருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடி, இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கீர் ஸ்டாமரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் நினைவுகூர்ந்த அவர்கள், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை இன்னும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டனர்.

    இரு நாடுகளும் பலனடையும் இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த விரைந்து பணியாற்றுவது என முடிவுசெய்யப்பட்டது.

    பிரிட்டனின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டிய இருவரும், இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர் என தெரிவித்துள்ளது.

    • ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
    • கட்சியை தன்னால் மட்டுமே காப்பாற்ற முடியும் என போரிஸ் ஜான்சன், கட்சி எம்.பி.க்களிடம் கூறியிருக்கிறார்.

    லண்டன்:

    பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக, பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரே பிரதமராக நியமிக்கப்படுவார். தலைவர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், மக்களவை தலைவர் பென்னி மார்டண்ட் ஆகியோர் உள்ளனர். அநேகமாக அடுத்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போதைய சூழலில் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு, லிஸ் டிரசிடம் தோல்வியைத் தழுவிய ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால், ரிஷி சுனக்கை போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், லிஸ் டிரசுக்கு பதிலாக மீண்டும் தான் பிரதமர் ஆவதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி வருவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. கட்சியை காப்பாற்றுவதற்காக இவ்வாறு அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டிசம்பர் 2024-ல் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் பின்னடைவை சந்திக்க உள்ள கட்சியை தன்னால் மட்டுமே காப்பாற்ற முடியும் என போரிஸ் ஜான்சன், கட்சி எம்.பி.க்களிடம் கூறியிருக்கிறார்.

    பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் ஆளுங்கட்சிக்கு மக்கள் செல்வாக்கு குறைந்துவிட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகள், முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
    • முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

    லண்டன்:

    பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக, பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ் டிரஸ் கூறியிருக்கிறார். பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்ததால், இங்கிலாந்தின் வரலாற்றில் மிகக்குறுகிய காலம் பதவியில் இருந்த பிரதமர் என்ற பெயரை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.

    இந்த சூழலில் தற்போது அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஜெரேமி ஹண்ட், தான் தேர்தலில் போடியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்வதற்கு முன்பு YouGov எனும் அமைப்பு கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அப்போது தற்போதைய நிலையில் பிரதமராக யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என கன்சர்வேட்டிவ் கட்சியினரிடம் கேட்டனர். லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரை அடிப்படையாக கொண்டு கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு கருத்து தெரிவித்தவர்களில் 55 சதவீதம் பேர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவித்தனர். 25 சதவீதம் பேர் மட்டும் லிஸ் ட்ரசுக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ரிஷி சுனக்கிற்கு உள்ளதாக அந்த கருத்து கணிப்பு தெரிவித்தது.

    அதே சமயம் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் தவிர கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பென்னி மார்டண்ட், பாதுகாப்புத்துறை செயலாளர் பென் வாலஸ் ஆகியோரும் பிரதமர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகே, வெற்றி வாய்ப்புகளை கணிக்கும் சாத்தியங்கள் ஏற்படும்.

    இருப்பினும் இந்த தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால், பிரிட்டனின் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பதவியேற்ற 45 நாட்களில் லிஸ் டிரஸ் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என லிஸ் டிரஸ் தெரிவித்தார்.

    லண்டன்:

    பிரிட்டனின் பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

    நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

    இதையடுத்து இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகினார். தான் ஒரு தவறு செய்து விட்டதாகவும், அரசு விதிகளை மீறி விட்டதாகவும் கூறிய அவர், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டதாக கூறினார். அதன்பின்னர் முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர். இதனால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது.

    இவ்வாறு அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடிக்கும் சூழ்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ் டிரஸ் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார்.

    கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட டிரஸ், கட்சியின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறினார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதை அறிவிப்பதற்காக மன்னரிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.

    • கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    • நெருக்கடியை சமாளிக்கவே கூடுதல் கவனம் செலுத்தவிருப்பதாக பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் தெரிவித்தார்.

    லண்டன்:

    பிரிட்டனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து போரிஸ் ஜான்சன் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து தன் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார்.

    அதன்பின்னர் லிஸ் டிரஸ், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார். அப்போது, ராணி எலிசபெத் லிஸ் டிரசை பிரதமராக நியமனம் செய்தார். பின்னர் லண்டன் திரும்பியபிறகு 3வது பெண் பிரதமரான லிஸ் டிரஸ், நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையை நிகழ்த்தினார்.

    அப்போது, தனது கவனம் முழுவதையும் முக்கியமான 3 விஷயங்களில் செலுத்தவிருப்பதாக கூறினார். அதாவது தேசிய சுகதார சேவையை மேம்படுத்துவது, மக்களின் மீது உள்ள வரி சுமையை குறைப்பது மற்றும் ரஷியா இடையிலான போரினால் எழுந்திருக்கும் எரிசக்தி பிரச்சனையை சமாளிப்பது ஆகியவற்றில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தவிருப்பதாக குறிப்பிட்டார்.


    • இன்று 2-ஆம் சுற்று தேர்தல் நடைபெறுகிறது.
    • 2-ஆம் சுற்றில் போட்டியாளர்கள் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது.

    லண்டன்:

    நெருக்கடி காரணமாக இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.

    புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 11 பேர் அறிவித்தனர்.

    கடைசி நேரத்தில் போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், ரகுமான் சிஸ்டி, முன்னாள் சுகாதார மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் விலகுவதாக அறிவித்த நிலையில், களத்தில் 8 பேர் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று வாக்குப்பதிவில் கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா். இதில் 88 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த இங்கிலாந்து முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    வர்த்தக மந்திரி பென்னி மொர்டான்ட் 67 வாக்குகள், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் 50 வாக்குகள், முன்னாள் மந்திரி கெமி படனாக் 40 வாக்குகள், டாம் டுகெந்தாட் 38 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றனர். மற்றொரு இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவா்மன் 32 வாக்குகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றார்.

    2ம் சுற்றுக்கு 30 வாக்குகளை பெற வேண்டிய நிலையில், நாதிம் சகாவி, ஜெரிமி ஹண்ட் ஆகியோரும் முறையே 25, 18 வாக்குகள் பெற்று வாய்ப்பை இழந்தனர். இன்று 2-ம் சுற்று தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த சுற்றில் போட்டியாளர்கள் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது. கடைசி இருவா் தோந்தெடுக்கப்படும் வரை பலசுற்றுகளாக வாக்குப்பதிவு நடைபெறும். புதிய பிரதமராக தோந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5-ந்தேதி அறிவிக்கப்படுகிறது.

    • புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் உள்பட 8 பேர் உள்ளனர்.
    • எம்.பி.க்கள் பலர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    லண்டன்:

    பிரட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கு சொந்த கட்சி எம்.பி.க்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. கொரோனா விதி முறையை மீறி மது விருந்து நடத்தியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சையில் சிக்கிய அவர், அரசாங்கத்தை திறமையுடன் நடத்தவில்லை என்று நிதி மந்திரியாக இருந்த ரிஷி சுனக் உள்ளிட்ட மூத்த மந்திரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

    நெருக்கடி அதிகமானதால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இதையடுத்து அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.

    புதிய பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 11 பேர் அறிவித்தனர். கடைசி நேரத்தில் போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், ரகுமான் சிஸ்டி, முன்னாள் சுகாதார மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் விலகுவதாக அறிவித்த நிலையில், களத்தில் 8 பேர் உள்ளனர்.

    இங்கிலாந்து அரசமைப்பு சட்டப்படி ஆளும் கட்சி தலைவர்தான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க முடியும். அதன்படி கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமராக பதவியேற்க உள்ளார். தலைவர் தேர்தல் இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது. அக்கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களிப்பாளர்கள். முதல் சுற்று தேர்தலில் 30 எம்.பி.க்களின் ஆதரவை பெற தவறும் வேட்பாளர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றுதல் வாக்கெடுப்பில் வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டே வந்து இறுதியில் 2 பேர் மட்டும் களத்தில் இருப்பார்கள்.

    இறுதிச் சுற்று போட்டியிலும் இருவரில் ஒருவரை கட்சியின் 2 லட்சம் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். அவரே கட்சி தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார். முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    தற்போது களத்தில் உள்ள 8 பேரில் ரிஷி சுனக்குக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அவருக்கு எம்.பி.க்களில் அதிக ஆதரவு இருப்பதால் அடுத்த பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

    போட்டியில் இருந்து விலகிய கிராண்ட் ஷேப்ஸ், தனது ஆதரவை ரிஷி சுனக்குக்கு தெரிவித்துள்ளார். இதே போல் எம்.பி.க்கள் பலர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய பிரதமரின் பெயர் வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அறி விக்கப்படும்.

    இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெற்று, தெரசா மே அரசு பிழைத்தது. இதையடுத்து ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. #BrexitVote #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேற முடிவு எடுத்தது. இது தொடர்பாக 2016-ல் நடந்த பொதுவாக்கெடுப்பில் அந்த நாட்டு மக்களும் ஆதரவு அளித்தனர்.

    இப்போது இங்கிலாந்து முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே முடுக்கி விட்டார். இது ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது.

    ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார். ஆனால் இது இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் எதிர்த்தது. இருந்தபோதும் இந்த ஒப்பந்தத்துக்கு கடந்த நவம்பர் மாத கடைசியில் ஐரோப்பிய கூட்டமைப்பு தனது ஒப்புதலை அளித்தது.

    இருப்பினும், இந்த ஒப்பந்தத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது ஒப்புதலை வழங்க வேண்டிய அவசியம் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 15-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எதிராக 432 ஓட்டுக்களும், ஆதரவாக 202 ஓட்டுக்களும் விழுந்தன.

    இதன் காரணமாக பிரதமர் தெரசா மே வரலாறு காணாத தோல்வியை சந்திக்க நேரிட்டது. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

    அதே சூட்டோடு சூடாக தெரசா மேயின் அரசு மீது எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பின், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் தெரசா மே அரசுக்கு மிக மோசமான தோல்வி கிடைத்ததால், இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    இந்த ஓட்டெடுப்பு இந்திய நேரப்படி நேற்று முன்தினம் (புதன்கிழமை) நள்ளிரவில் நடந்தது. அதில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 306 ஓட்டுக்களும், எதிராக 325 ஓட்டுக்களும் கிடைத்தன. 19 ஓட்டுகள் வித்தியாசத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்றுப்போனது. இதன் காரணமாக தெரசா மே அரசு பிழைத்துக்கொண்டது.

    இதைத் தொடர்ந்து பிரதமர் தெரசா மே, ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் எல்லா கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப் பெறும் வகையில் அவர்களுடன் பேசத் தீர்மானித்துள்ளார்.

    ஆனால் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பாக ஒப்பந்தம் இல்லாத ‘பிரெக்ஸிட்’ திட்டத்துக்கு பிரதமர் தெரசா மே உறுதி அளிக்க வேண்டும் என்று தொழிற்கட்சி தலைவர் ஜெரேமி கார்பின் கிடுக்கிப்பிடி போட்டுள்ளார்.

    அதே நேரத்தில் பிரதமர் தெரசா மே, ஆக்கப்பூர்வமான வகையில் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

    நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்த நிலையில், பிரதமர் தெரசா மே தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வெளியே பேசினார். அப்போது அவர், அனைவரும் தங்கள் சொந்த நலன்களை புறந்தள்ளி விட்டு நாட்டு நலனை கருத்தில் கொண்டு ‘பிரெக்ஸிட்’ திட்டம் நிறைவேற ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த நிலையில் அவர் வரும் 21-ந் தேதி, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பாக மாற்று திட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடி உள்ளதாக லண்டனில் இருந்து வருகிற தகவல்கள் கூறுகின்றன.

    இதற்கிடையே ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் விவகாரத்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் நிலவுகிறது.

    இது போன்ற வேண்டுகோளை 170 முன்னணி தொழில் அதிபர்களும் பிரதமர் தெரசா மே மற்றும் தொழிற்கட்சி தலைவர் ஜெரேமி கார்பின் முன் வைத்துள்ளனர். #BrexitVote #TheresaMay
    பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் தோல்வியடைந்ததையடுத்து, பிரதமர் தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. #BrexitVote #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய யூனியன் அமைத்துள்ளது. அதில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் பிரிட்டனும் அங்கம் வகித்து வருகிறது. ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது. அதில் இணைந்துள்ளதால் பிரிட்டன் தனது தனித்தன்மையையும் இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு பிரிவினர் குற்றம்சாட்டினர்.

    அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்சிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே பிரெக்சிட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.



    இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கையை மார்ச் 29-ந்தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய பிரெக்சிட் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இதில் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிராக 432 எம்.பி.க்களும், ஆதரவாக 202 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதன் மூலம் பிரதமர் தெரசா மே தரப்பு தோல்வி அடைந்தது.

    நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மேயின் கட்சி எம்.பி.க்களே அவருக்கு எதிராக வாக்களித்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். இத்தகைய வரலாறு கடந்த 19-ம் நூற்றாண்டில் நடைபெற்றது.

    1886-ம் ஆண்டு பிரதமராக இருந்த வில்லியம் கிளேடுஸபோன் அயர்லாந்து உள்நாட்டு கொள்கையை ஆதரித்தார். அது குறித்த வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி 2 ஆக உடைந்து, தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அதே நிலை தற்போது திரும்பியுள்ளது.

    தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் பிரதமர் தெரசா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அவர், தெரசா மேயின் 2 ஆண்டு கால ஆட்சி தோல்வி அடைந்துவிட்டதால் அவர் மீது நம்பிக்கை இல்லை என்றார்.

    இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்றது.  வாக்கெடுப்பின் முடிவில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மேக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்நது.  

    நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 306 பேரும் எதிராக 325 பேரும் வாக்களித்ததால் தெரசா மே அரசு தப்பியது.  #BrexitVote #TheresaMay
    பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் தோல்வியடைந்ததையடுத்து, பிரதமர் தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடத்தப்படுகிறது. #BrexitVote #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய யூனியன் அமைத்துள்ளது. அதில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் பிரிட்டனும் அங்கம் வகித்து வருகிறது. ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது. அதில் இணைந்துள்ளதால் பிரிட்டன் தனது தனித்தன்மையையும் இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு பிரிவினர் குற்றம்சாட்டினர்.

    அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்சிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே பிரெக்சிட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கையை மார்ச் 29-ந்தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய பிரெக்சிட் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இதில் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிராக 432 எம்.பி.க்களும், ஆதரவாக 202 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதன் மூலம் பிரதமர் தெரசா மே தரப்பு தோல்வி அடைந்தது.

    நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மேயின் கட்சி எம்.பி.க்களே அவருக்கு எதிராக வாக்களித்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். இத்தகைய வரலாறு கடந்த 19-ம் நூற்றாண்டில் நடைபெற்றது.

    1886-ம் ஆண்டு பிரதமராக இருந்த வில்லியம் கிளேடுஸபோன் அயர்லாந்து உள்நாட்டு கொள்கையை ஆதரித்தார். அது குறித்த வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி 2 ஆக உடைந்து, தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அதே நிலை தற்போது திரும்பியுள்ளது.



    தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் பிரதமர் தெரசா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அவர், தெரசா மேயின் 2 ஆண்டு கால ஆட்சி தோல்வி அடைந்துவிட்டதால் அவர் மீது நம்பிக்கை இல்லை என்றார்.

    நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் இன்று விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அதில் தீர்மானம் வெற்றி பெற்றால் அரசு கவிழும் ஆபத்து ஏற்படும். அல்லது பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும். #BrexitVote #TheresaMay
    பிரிட்டனில் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #DraftBrexitAgreement #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை (பிரெக்சிட்) ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு மேற்கொண்டு வந்தது.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பிறகு, பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த வரைவு ஒப்பந்தத்தை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்துள்ளார்.



    இந்த வரைவு ஒப்பந்தத்தை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். அதிருப்தி அடைந்த பலர் பதவி விலகினர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

    இந்நிலையில், தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு ஒப்பந்தம் மீது அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் ஆளுங்கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

    நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என்றால், தீர்மானத்திற்கு ஆதரவாக 48 எம்பிக்கள் கடிதம் கொடுக்க வேண்டும். இதில் ஏற்கனவே பெரும்பாலான எம்பிக்கள் கடிதம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இந்த தீர்மானம் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என தெரிகிறது. #DraftBrexitAgreement #TheresaMay
    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் பிரிட்டனின் ‘பிரெக்சிட்’ முடிவுக்கு பின்னர் உலகில் மிகவும் ‘டென்ஷனான’ பதவியை வகிக்கும் தெரசா மே தன்னைப்பற்றி மனம் திறந்துள்ளார். #BritishPMMayrelax
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை ஆதரித்து பிரிட்டனின் மக்கள் பெருவாரியாக வாக்களித்த பின்னர், இந்த முடிவுக்கு பின்னர் ஐரோப்பிய யூனியனிடம் இருந்து பெற வேண்டிய இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    அவரது சில முடிவுகளை எதிர்த்து ஆளும்கட்சி எம்.பி.க்கள் போர்குரல் எழுப்பிவரும் நிலையில், எனது முடிவுகளை ஆதரிக்காவிட்டால் ஒருநாளும் பிரெக்சிட் நிறைவேறாது. குறுகிய காலத்தில் பாராளுமன்ற தேர்தலை நீங்கள் சந்திக்க நேரிடும் என தெரசா மே மிரட்டியதில் எதிர்ப்பு சற்றே தணிந்துள்ளது.

    இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகில் மிகவும் ‘டென்ஷனான’ பிரதமர் பதவியை வகிக்கும் நீங்கள் உங்கள் மன உளைச்சல்களில் இருந்து எப்படி ஆசுவாசப்படுத்தி கொள்கிறீர்கள் என்னும் கேள்விக்கு தெரசா மே சமீபத்தில் பதிலளித்துள்ளார்.

    இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் உள்ள நியூகேஸ்ட்டில் நகரில் உள்ள தொழிற்சாலைக்கு சென்ற தெரசா மேவிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு , ‘ஓய்வு மற்றும் விடுமுறை நேரங்களில் எனது கணவருடன் சேர்ந்து நடக்கப் பிடிக்கும்.

    நாம் சாப்பிடும் பொருளை நாமே சமைப்பது என்ற வகையில் சமையலில் மிகவும் ரசனையோடு ஈடுபடுவேன். நல்ல சமையல் குறிப்புகளுடன் கூடிய சுமார் 150 புத்தகங்கள் என்னிடம் உள்ளன. அதேபோல், போலீஸ் வாழ்க்கையை மையமாக வைத்து அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்.சி.ஐ.எஸ். தொடரை பார்ப்பதும் எனக்குப் பிடிக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். #BritishPMMayrelax #USpolicedramaNCIS
    ×